search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார் அட்டை"

    • சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவிற்கு இதுவரை 35 சதவீதம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.
    • நடப்பு மண்டல சீசனையொட்டி தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் பத்தனம்திட்டாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். இதற்காக பம்பை, எருமேலி, வண்டிப் பெரியார் (சத்ரம்) ஆகிய இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவிற்கு இதுவரை 35 சதவீதம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். முன்பதிவு செய்த அய்யப்ப பக்தர்கள் தங்களது முன்பதிவை ரத்து செய்தால் அந்த தரிசன காலி இடத்திற்கு ஏற்ப உடனடி முன்பதிவின்படி கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    நடப்பு மண்டல சீசனையொட்டி தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதாவது, தினசரி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

    சன்னிதானம்-பம்பை இடையேயான ரோப் கார் இணைப்பு திட்ட பணிகளை நடப்பு சீசனிலேயே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் காப்பீட்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது.
    • பள்ளி சான்றிதழ் அடிப்படையில், இறந்தவரின் வயது 45 தான் என்று அவர்கள் கூறினர்.

    புதுடெல்லி:

    கடந்த 2015-ம் ஆண்டு, அரியானா மாநிலம் ரோதக்கை சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    அவரது மரணத்துக்கு இழப்பீடு கோரி, ரோதக்கில் உள்ள மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு தீர்ப்பாயத்தில் அவருடைய குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.

    பள்ளி சான்றிதழ் அடிப்படையில், இறந்தவரின் வயது 45 என்று கணக்கிட்ட தீர்ப்பாயம், அவருடைய குடும்பத்துக்கு ரூ.19 லட்சத்து 35 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

    அதை எதிர்த்து பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் காப்பீட்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆதார் அட்டை அடிப்படையில் கணக்கிட்டால், இறந்தவரின் வயது 47 என்று கூறிய ஐகோர்ட்டு, இழப்பீட்டு தொகையை ரூ.9 லட்சத்து 22 ஆயிரமாக குறைத்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து, இறந்த நபரின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். பள்ளி சான்றிதழ் அடிப்படையில், இறந்தவரின் வயது 45 தான் என்று அவர்கள் கூறினர்.

    இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.

    நீதிபதிகள் கூறியதாவது:-

    2015-ம் ஆண்டின், சிறார் நீதி சட்டத்தின் 94-வது பிரிவின்படி, பள்ளி சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி அடிப்படையில்தான் வயது தீர்மானிக்கப்பட வேண்டும்.

    ஆதார் அட்டை வழங்கும் தனித்துவ அடையாள ஆணையம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், ''ஆதார் அட்டையை அடையாளத்தை உறுதிப்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், பிறந்த தேதிக்கு அது ஆதாரம் அல்ல'' என்று கூறியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி இத்தகவலை தெரிவித்துள்ளது.

    எனவே, வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல. மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், 100 பேருக்கு போலியாக அவர் ஆதார் அட்டை பெற்றுத் தந்துள்ளார்.
    • தாசில்தார் ஒப்புதல் அளித்த பின்னரே ஆதார் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் ஒருங்கிணைந்த அடையாள அட்டையாக ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆதார் மையங்களில் பொதுமக்கள் விண்ணப்பித்து அட்டையை பெற முடியும். இங்கேயே பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதனிடையே எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி, தற்சமயம் தரகர்களின் உதவியுடன் ஆதார் அட்டை வழங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில், திருப்பூரில் வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு மாரிமுத்து என்பவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ஆதார் அட்டை பெற்றுத் தந்ததாக கைது செய்யப்பட்டார்.

    கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், 100 பேருக்கு போலியாக அவர் ஆதார் அட்டை பெற்றுத் தந்துள்ளார். இதுபோன்ற புகார்களையடுத்து ஆதார் பெறுவதில் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் கோரி விண்ணப்பித்தால், அவர்களது மனுக்கள் ஆன்லைன் மூலம் யு.ஐ.டி.ஏ.ஐ. ஒருங்கிணைந்த மையத்திற்குச் செல்லும். ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவருக்கு ஆதார் அட்டை வழங்கப்படும்.

    அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அது குறித்து விசாரணை நடத்த அந்தந்த பகுதி தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தாசில்தார் தலைமையில் ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ.க்கள் உண்மை தன்மையை நேரடியாக களஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும். தாசில்தார் ஒப்புதல் அளித்த பின்னரே ஆதார் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஆதார் சேவை மையத்தை சேர்ந்த அதிகாரி கூறுகையில், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் மற்றும் சட்டவிரோதமாக தமிழகத்தில் நுழைபவர்கள் முறைகேடாக ஆதார் அட்டை பெறுவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

    இதன்படி, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிய அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் போது, அவர்களுக்கு பிற மாநிலங்களில் ஆதார் அட்டை உள்ளதா? இலங்கை அகதியாக வந்துள்ளாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தாசில்தார்கள் விசாரணை நடத்திய பின்னரே ஒப்புதல் அளிப்பார்கள்.

    இதற்காக முதற்கட்ட ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. வருகிற 15-ந்தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

    • புனிதமாக வழங்கக்கூடிய பிரசாதத்தை சுவீட் கடையில் விற்கப்படும் இனிப்பு போல வைக்கப்பட்டுள்ளது.
    • எந்தவித சாமி தரிசனமும் செய்யாமல் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லட்டுகள் வரை புரோக்கர்கள் மூலம் வாங்கப்படுகிறது.

    திருப்பதி:

    தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கூறியதாவது:-

    திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக வரக்கூடிய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க இலவச சர்வ தரிசன டோக்கன்கள் வாரத்திற்கு 1 லட்சத்து 5 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது. இதை 1 லட்சத்து 60 ஆயிரம் டோக்கன்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதனை சிலர் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தங்களின் சுய கவுரவத்திற்காக காட்சி பொருளாக இனிப்புடன் வைக்க கூடிய பண்பாடு அதிகரித்து வருகிறது.

    இதற்காக புரோக்கர்கள் மூலம் அதிக விலைக்கு இந்த லட்டுகளை வாங்கி செல்கின்றனர். நானே ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதில் லட்டு பிரசாதம் காட்சிக்காக வைக்கப்பட்டிருப்பதை பார்த்து கவலையடைந்தேன்.

    புனிதமாக வழங்கக்கூடிய பிரசாதத்தை சுவீட் கடையில் விற்கப்படும் இனிப்பு போல வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வதை தடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    மேலும் ஒரு நாளைக்கு 3.5 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனைக்காக கவுன்டர்களில் வைக்கப்படுகிறது. இதில் சாமி தரிசனம் செய்யக்கூடிய பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுவதோடு கூடுதலாக பக்தர்களின் தேவைக்கேற்ப வழங்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். ஆனால் எந்தவித சாமி தரிசனமும் செய்யாமல் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லட்டுகள் வரை புரோக்கர்கள் மூலம் வாங்கப்படுகிறது.

    இதனால் தரிசனம் செய்யக்கூடிய பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு ஒருவருக்கு 3 லட்டுகளும், சாமி தரிசனமே செய்யாதவர்களில் ஒருவருக்கு 5 லட்டுகள் என பெற்று செல்லும் விதமாக உள்ளது. இதனால் சாமி தரிசனம் செய்யக்கூடிய பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதனை தடுக்க வேண்டும் என்பதற்காக, சாமி தரிசனம் செய்யாமல் வரக்கூடிய பக்தர்கள் ஆதார் கார்டு காண்பித்து 2 லட்டுகள் மட்டும் பெறும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தேவைக்கு ஏற்ப வழங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பொதுப் பக்தர்களின் பெரிய நலன்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • லட்டு வளாகத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருமலை:

    திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் (தலாரிகள்) தங்களுக்குரிய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வெளிமார்க்கெட்டில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதங்களை விற்பனை செய்வதை நாங்கள் கண்காணித்துள்ளோம். இதைத் தடுக்க தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் இனிமேல் லட்டு கவுண்ட்டர்களில் ஆதார் அட்டையைப் பதிவு செய்து 2 லட்டுகளை பெறலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

    மேலும் இடைத்தரகர்கள், தலாரிகளின் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பக்தர்களுக்கு விற்கப்படும் லட்டு பிரசாதங்களை வெளிப்படைத் தன்மையுடன் வழங்கவும், டோக்கன் இல்லாத பக்தர்களுக்கு ஆதார் சரிபார்ப்பை அமல்படுத்தவும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுப் பக்தர்களின் பெரிய நலன்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக, லட்டு வளாகத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லட்டுகளை 48 முதல் 62 வரை உள்ள கவுண்ட்டர்களில் பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    நாங்கள் வேறு எதையும் கட்டுப்படுத்தவில்லை. தரிசன டோக்கன்கள் அல்லது டிக்கெட்டுகள் உள்ள பக்தர்கள் ஒரு இலவச லட்டு பெறுவதைத் தவிர, முன்பு போலவே கூடுதல் லட்டுகளையும் வாங்கலாம்.

    மேலும் இந்த நடவடிக்கை லட்டு வினியோக அமைப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும்.
    • இதுவரை நாடு முழுவதும் 100 கோடியே 14 லட்சத்து 12 ஆயிரத்து 413 பேர் மட்டுமே ஆதார் அட்டையை புதுப்பித்துள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. இந்தியாவில், 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.

    அரசின் பல்வேறு நலத்திட்ட சேவைகளுக்கு ஆதார் அட்டை அவசியம். பல துறைகளில் ஆதார் அட்டைகளை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    ஆதார் தொடர்பான மோசடிகளை தடுக்க, ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறை விதிகளை கடந்த 2016-ம் ஆண்டு ஆதார் ஆணையம் கொண்டு வந்தது.

    இதன்படி ஆதார் அட்டை வைத்திருக்கும் நபர்கள், ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும்.

    அந்த அடிப்படையில், ஆதார் அட்டைகளை புதுப்பிக்க ஆதார் ஆணையம் மக்களை அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை புதுப்பித்து வருகின்றனர்.

    இதுவரை நாடு முழுவதும் 100 கோடியே 14 லட்சத்து 12 ஆயிரத்து 413 பேர் மட்டுமே ஆதார் அட்டையை புதுப்பித்துள்ளனர் என்றும், 40 கோடியே 7 லட்சத்து 56 ஆயிரத்து 436 பேர் ஆதார் எண்ணை புதுப்பிக்கவில்லை என்றும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

    செப்டம்பர் 14-ந் தேதி வரை கட்டணமின்றி ஆதாரை புதுப்பிக்க ஆணையம் அவகாசம் வழங்கி உள்ளது. இதுவரை ஆதாரை புதுப்பிக்காதவர்கள் அதற்குள் ஆதார் அட்டை புதுப்பிக்க வேண்டும் என்றும், அதற்கு பின்பு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி தான் ஆதாரை புதுப்பிக்க முடியும் என்றும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆதார் சேவை மைய நிர்வாகி ஒருவர் கூறும்போது, 'ஆதார் சேவை மையத்துக்கு நேரில் சென்று ஆதாரை புதுப்பிக்கும்போது கருவிழி, விரல்ரேகை போன்றவற்றையும் சேர்த்து புதுப்பிக்கப்படும். தற்போது வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகள் விரல்ரேகை மற்றும் கருவிழி மூலமே ஆதார் உறுதி செய்யப்படுகிறது.

    திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தரிசன டிக்கெட்டுகள் கருவிழி மூலம் ஆதாரை உறுதி செய்து தான் வழங்கப்படுகிறது. விரல் ரேகை, கருவிழியை புதுப்பித்து கொள்வதன் மூலம் தேவையான இடங்களில் ஆதார் அட்டையை உறுதி செய்வதற்கான தடைகள் எதுவும் இருக்காது. ஆதாரை புதுப்பிக்காதபட்சத்தில் கைரேகை, கருவிழி போன்றவை 'மேட்ச்' ஆவதற்கு சிரமப்படும்' என்றார்.

    • ஆதார் அட்டையை கொண்டு வந்தால் தான் அவர்கள் என் தொகுதி மக்கள் என்பதை என்னால் உறுதிப்படுத்தி கொள்ள முடியும்.
    • மாநிலத்தின் ஒவ்வொரு பகுதி மக்களையும் சந்திப்பது எங்கள் பொறுப்பு.

    இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை விட 74,755 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து கங்கனா ரனாவத் மண்டி தொகுதியில் உள்ள பஞ்சாயத்து பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த தொகுதி எம்.பி. கங்கனா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், " நான் மண்டி தொகுதியில் இருக்கும் நாட்களில் இந்த பஞ்சாயத்து பவனில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் வழியாக மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்க முயற்சிப்பேன். நான் மண்டியில் இருக்கும் ஒவ்வொரு நேரத்தையும் என் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன். இந்த இடத்தில் என் தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் நான் சந்திக்க விரும்பவில்லை.

    ஆதலால் என் தொகுதி மக்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்தால் தான் அவர்கள் என் தொகுதி மக்கள் என்பதை என்னால் உறுதிப்படுத்தி கொள்ள முடியும். மேலும் என்னை சந்திக்க வரும் என் தொகுதி மக்கள் அவர்களின் குறைகளை பேப்பரில் எழுதி கொண்டு வரவேண்டும். அப்போதுதான் பிரச்சனைகளை விரைவாக தீர்த்து வைக்க முடியும்" என்று கூறியிருந்தார்.

    இதற்கு, அம்மாநில காங்கிரஸ் தலைவரும், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவருமான விக்ரமாதித்ய சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு கூட்டத்திற்கு தங்கள் ஆவணங்களைக் கொண்டு வருமாறு மக்களைக் கேட்பது சரியல்ல. மக்கள் தன்னை சந்திக்க விரும்பினால் ஆதார் அட்டையைக் கொண்டு வரத் தேவையில்லை. நாங்கள் மக்கள் பிரதிநிதிகள். எனவே, மாநிலத்தின் ஒவ்வொரு பகுதி மக்களையும் சந்திப்பது எங்கள் பொறுப்பு. அது ஒரு சிறிய பணியாக இருந்தாலும், பெரிய பணியாக இருந்தாலும், கொள்கை விஷயமாக இருந்தாலும், தனிப்பட்ட வேலையாக இருந்தாலும், அதற்கு எந்த அடையாளமும் தேவையில்லை என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான் மண்டியில் இருக்கும் ஒவொரு நேரத்தையும் என் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
    • என்னை சந்திக்க வரும் என் தொகுதி மக்கள் அவர்களின் குறைகளை பேப்பரில் எழுதி கொண்டு வரவேண்டும்.

    இமாசலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை விட 74,755 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், என்னை சந்திக்க வரும் என் தொகுதி மக்கள் அனைவரும் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும் என வித்தியாசமான நிபந்தனையை கங்கனா விதித்துள்ளார்.

    நேற்று மண்டி தொகுதியில் உள்ள பஞ்சாயத்து பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த தொகுதி எம்.பி. கங்கனா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், " நான் மண்டி தொகுதியில் இருக்கும் நாட்களில் இந்த பஞ்சாயத்து பவனில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் வழியாக மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்க முயற்சிப்பேன். நான் மண்டியில் இருக்கும் ஒவ்வொரு நேரத்தையும் என் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன். இந்த இடத்தில் என் தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் நான் சந்திக்க விரும்பவில்லை.

    ஆதலால் என தொகுதி மக்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்தால் தான் அவர்கள் என் தொகுதி மக்கள் என்பதை என்னால் உறுதிப்படுத்தி கொள்ள முடியும். மேலும் என்னை சந்திக்க வரும் என் தொகுதி மக்கள் அவர்களின் குறைகளை பேப்பரில் எழுதி கொண்டு வரவேண்டும். அப்போதுதான் பிரச்சனைகளை விரைவாக தீர்த்து வைக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார். 

    • நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மாணவா்களின் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன.
    • மாணவா்கள் அனைவருக்கும் அப்பள்ளியிலேயே ஆதாா் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதாா் எண் புதுப்பித்தல் தொடா்பான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறைச் செயலா் குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பள்ளிகளில் மதிய உணவு, விலையில்லா பாடப் புத்தகங்கள், பேருந்து பயண அட்டை மற்றும் மிதிவண்டிகள் போன்ற விலையில்லா நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மாணவா்களின் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன.

    மாணவா்களுக்கு அளிக்கப்படும் இந்த நலத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித் தொகைகள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதாா் எண் அவசியமாகிறது.

    பயிலும் பள்ளிலேயே ஆதாா் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் அப்பள்ளியிலேயே ஆதாா் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதாா் எண் புதுப்பித்தல் தொடா்பான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதாா் பதிவுக் கருவிகளைக் கொள்முதல் செய்து தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் ஒப்படைத்து உள்ளது.

    தமிழ்நாடு மின்னணு நிறுவனம், ஆதாா் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதாா் தரவு உள்ளீட்டாளா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு பயிற்சியை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதாா் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில் 'பயிலும் பள்ளியிலேயே ஆதாா் பதிவு' என்ற சிறப்பு முன்னெடுப்பானது, வரும் கல்வி ஆண்டின் பள்ளி தொடக்க நாளான ஜூன் 6-ந்தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களிலும் முழு வீச்சில் செயல்படவுள்ளது. இந்நிகழ்வை அமைச்சா்கள், பாராளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோா் முன்னிலையில் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடந்த ஆண்டில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
    • வேலை செய்யாமலேயே ஆட்களின் பெயரை எழுதி பணத்தை சுரண்டுவதும் தடுக்கப்படும்.

    சென்னை:

    மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளார்கள். இந்த வேலை வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் முறைகேடுகளை தவிர்க்கவும் ஆதார் இணைப்பு அவசியம் என்றும் அதன் அடிப்படையிலேயே சம்பளம் வழங்கும் முறையை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

    வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடந்த ஆண்டில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதிகட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கு மேல் கால அவகாச நீட்டிப்பு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.

    கடந்த 3 ஆண்டுகளில் ஒரு நாளாவது வேலை பார்த்து இருந்தாலே அவர்கள் பணியில் இருக்கும் தொழிலாளர்களாகவே கருதப்படுவார்கள். தற்போது கொண்டு வரப் பட்ட இந்த திட்டத்தின்படி பதிவு செய்து இருந்த 25.25 கோடி தொழிலாளர்களில் 14.35 கோடி பேர் மட்டுமே தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளது.

    மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில் தகுதியான காரணங்களால் பதிவு செய்ய இயலாமல் போனவர்கள் மீண்டும் சேர்க்கலாம் என்று அறிவித்துள்ளது.

    கடந்த 21 மாதத்தில் 7.6 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. வேலைக்கான அட்டையுடன் ஆதார் கார்டு இணைத்துவிட்டால் அது வங்கி கணக்குடன் இணைந்து இருக்கும். அத்துடன் நிதி வழங்கும் துறையுடனும் இணைக்கப்பட்டிருக்கும்.

    இதன் மூலம் தொழிலாளர்களுக்கு விரைவாக சம்பள பட்டுவாடா செய்ய முடியும். வேலை செய்யாமலேயே ஆட்களின் பெயரை எழுதி பணத்தை சுரண்டுவதும் தடுக்கப்படும்.

    இன்று முதல் ஆதார் அட்டையை பணியாளர் அட்டையுடன் இணைத்திருப்பதன் அடிப்படையிலேயே சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்.

    • கடலூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
    • முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் 3-வது முறையாக வேலைவாய்ப்பு முகாம் வருகிற நவம்பர் 4-ந்தேதி சனிக்கிழமையன்று கடலூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஊரக இளைஞர்கள் மற்றும் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, தொரப்பாடி, குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதியை சேர்ந்த நகர்புற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இளைஞர் தொழில்திறன் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் இதர கல்வி தகுதிகளையுடைய இளைஞர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்று, இருப்பிட சான்று, வருமானச் சான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை இத்துடன் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், சுய விலாசமிட்ட அஞ்சல் உறைகளுடன் மேற்படி முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • வெளிநாட்டு கல்விக்காக கடன் பெறுபவர்களுக்கு ரூ.7 லட்சம் வரம்புக்கு மேல் 0.5 சதவீத குறைந்த டி.சி.எஸ். விகிதம் விதிக்கப்படும்.
    • மத்திய அரசின் அறிவிப்பின்படி நாட்டில் புழக்கத்தில் இருந்து வரும் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.

    சென்னை :

    நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன் விவரம் வருமாறு:-

    செப்டம்பர் 30-ந்தேதிக்குள், செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் பண்டு கணக்குகளுக்கு பரிந்துரையாளர் (நாமினி) ஒருவரின் பெயரை குறிப்பிடுவது கட்டாயம் ஆகும்.

    அவ்வாறு செய்யாத பட்சத்தில் உங்கள் கணக்குகள் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுக் கணக்குகளுக்கும் இது பொருந்தும்.

    2023-24ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் மத்திய அரசு டி.சி.எஸ். கட்டணங்களை 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி உள்ளது.

    வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் இனி ரூ.7 லட்சத்திற்கும் மேல் கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்யும் பணத்திற்கு 20 சதவீதம் வரி செலுத்த நேரிடும். ரூ.7 லட்சத்துக்கும் குறைவான செலவினங்களுக்கு 5 சதவீதம் டி.சி.எஸ். செலுத்த வேண்டும்.

    ரூ.7 லட்சத்தை தாண்டும் பட்சத்தில் அக்டோபர் 1 முதல் 20 சதவீதம் டி.சி.எஸ். செலுத்தப்பட வேண்டும்.

    வெளிநாட்டு கல்விக்காக கடன் பெறுபவர்களுக்கு ரூ.7 லட்சம் வரம்புக்கு மேல் 0.5 சதவீத குறைந்த டி.சி.எஸ். விகிதம் விதிக்கப்படும்.

    மேலும் மருத்துவம் மற்றும் கல்வி போன்ற செலவுகள் ஏற்படும் பட்சத்தில் டி.சி.எஸ். 5 சதவீதமாக வசூலிக்கப்படும்.

    மியூச்சுவல் பண்டுகளை போலவே டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் வாடிக்கையாளர்கள் நாமினியை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை மற்றும் மற்ற சிறு சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கள் கணக்குகளில் ஆதார் எண்ணை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மத்திய அரசின் அறிவிப்பின்படி நாட்டில் புழக்கத்தில் இருந்து வரும் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.

    அக்டோபர் 1-ந்தேதி முதல் இந்த 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இதனால் பொதுமக்கள் தங்கள் கைகளில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்.

    தேசிய தலைநகர் பிராந்தியத்தில், டீசல் ஜெனரேட்டர்களால் ஏற்படும் காற்று மாசை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விரிவான ஆய்வை காற்று தர மேலாண்மைக்கான ஆணையம் மேற்கொண்டு உள்ளது.

    தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகள் உள்பட அனைத்துப் பிரிவிலும் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்த இந்த ஆணையம், மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.

    மாற்றியமைக்கப்பட்ட இந்த அட்டவணை வருகிற 1-ந்தேதி முதல் கடுமையாக பின்பற்றப்படும்.

    அக்டோபர் 1-ந்தேதி முதல் பத்திரப்பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க வேண்டும் என பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

    அக்டோபர் 1-ந்தேதி முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துகள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துகள் குறித்த புகைப்படம் ஜியோ கோ-ஆர்டினேட்ஸோடு எடுக்கப்பட்டு, ஆவணமாக இணைக்க வேண்டும்.

    பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல அக்டோபர் 1-ந்தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.

    பக்தர்கள் தங்களது கைபேசி மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோ சாதனங்களை கோவில் நுழைவாயிலில் உள்ள படிப்பாதை, மின் இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கைபேசி பாதுகாப்பு மையங்களில் ஒரு கைபேசிக்கு 5 ரூபாய் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு செல்லலாம்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த சட்டம் 2023 மசோதா மக்களவை மற்றும் மேல்சபையில் நிறைவேற்றப்பட்டது.

    பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம் 2023, வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரஉள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் அரசின் சேவைகளுக்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    அக்டோபர் 1-ந்தேதி முதல் மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், சொத்துப் பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு, அரசுப்பணி நியமனம் ஆகியவற்றிற்கு ஒரே அரசு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும்.

    அரசு வேலைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் அவசியம்.

    அக்டோபர் 1-ந்தேதி முதல் ஆதார் பெறுவது மற்றும் அரசு வேலைகளில் சேருவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்படுகிறது.

    பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யும் புதிய சட்டத்திருத்தம் அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலாகிறது.

    ×